குறள் 1177:
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.
Aching, aching, let those exhaust their stream, That melting, melting, that day gazed on him
அதிகாரம் - 118 - கண்விதுப்பழிதல்
மு.வரதராசன் விளக்கம்
அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே!இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துத் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப் போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது) விழைந்து இழைந்து வேண்டி அவர்க் கண்ட கண் - விழைந்து உள்நெகிழ்ந்து விடாதே அன்று அவரைக் கண்ட கண்கள்; உழந்துழந்து உள்நீர் அறுக-இன்று இத்துயிலாது அழுங்கலாய துன்பத்தினை உழந்து தம் அகத்துள்ள நீர் அற்றே போக. (அடுக்கு இடைவிடாமைக்கண் வந்தது. அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது)
சாலமன் பாப்பையா விளக்கம்
விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்!