மு.வரதராசன் விளக்கம்
ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று,காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) தெரிந்து உணரா நோக்கிய உண்கண் - மேல் விளைவதனை ஆராய்ந்தறியாது அன்று காதலரை நோக்கி நின்ற உண்கண்கள்; பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன் - இன்று இது நம்மால் வந்ததாகலின் பொறுத்தல் வேண்டும் எனக் கூறுபடுத்துணராது துன்பம் உழப்பது என் கருதி? (விளைவது: பிரிந்து போயவர் வாராமையின் காண்டற்கு அரியராய் வருத்துதல், முன்னே வருவதறிந்து அது காவாதார்க்கு அது வந்தவழிப் பொறுத்தலன்றேயுள்ளது? அதுவும் செய்யாது வருந்துதல் கழிமடச் செய்கை என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?