மு.வரதராசன் விளக்கம்
பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்.
பரிமேலழகர் விளக்கம்
(தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்து சொல்லிய தோழிக்குச் சொல்லியது.) அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின் -நம் கவவுக் கடுமையறிந்த தலைவர், தாமே நம் முன்னின்று தம்பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்; நல்குவர் என்னும் நசை அரிது - அத்தன்மையார் பின்பு நம் ஆற்றாமை அறிந்து வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும். (அருமை: பயன்படுதல் இல்லாமை.. 'கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவு எண்ணுதலும் உணர்த்தலும் வல்லராயினார், பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்து வந்து நல்குதல் யாண்டையது'? என்பதாம். அழுங்குவித்தல் : பயன்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு பயனற்றது.