குறள் 1150:

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.

If we desire, who loves will grant what we require; This town sends forth the rumour we desire
அதிகாரம் - 115 - அலரறிவுறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார்.
பரிமேலழகர் விளக்கம்
(தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ அவன் உடன்போக்கு நயப்பச் சொல்லியது.) யாம் வேண்டும் கௌவை இவ்வூர் எடுக்கும் - உடன் போகற்கு ஏதுவாகல் நோக்கி யாம் பண்டே விரும்புவதாய அலரை இவ்வூர்தானே எடாநின்றது; காதலர் தாம் வேண்டின் நல்குவர் - இனிக் காதலர் தாமும் யாம் வேண்டியக்கால் அதனை இனிதின் நேர்வர், அதனால் இவ்வலர் நமக்கு நன்றாய் வந்தது. (எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நம்கண் காதல் உடைமையின் மறார்' என்பது தோன்றக் 'காதலர்' என்றாள். இவ்விருபது பாட்டும் புணர்தல் நிமித்தம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.