குறள் 1145:
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.
The more man drinks, the more he ever drunk would be; The more my love's revealed, the sweeter 'tis to me
அதிகாரம் - 115 - அலரறிவுறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) களித்தொறும் கள் உண்டல் வேட்டற்று - கள்ளுண்பார்க்குக் களிக்குந்தோறும் கள்ளுண்டல் இனிதாமாறு போல; காமம் வெளிப்படுந்தோறும் இனிது - எனக்குக் காமம் அலராந்தோறும் இனிதாகா நின்றது. ('வேட்கப்பட்டடற்றால்' என்பது 'வேட்டற்றால்' என நின்றது. வேட்கை மிகுதியால் அலரும் இன்பஞ் செய்யாநின்றது என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.