குறள் 1136:

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.

Of climbing 'horse of palm' in midnight hour, I think; My eyes know no repose for that same simple maid
அதிகாரம் - 114 - நாணுத்துறவுரைத்தல்
மு.வரதராசன் விளக்கம்
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
பரிமேலழகர் விளக்கம்
('மடலூரும் பொழுது இற்றைக்கும் கழிந்தது' என்றாட்குச் சொல்லியது) பேதைக்கு என் கண் படல் ஒல்லா - நின்பேதை காரணமாக என் கண்கள் ஒருகாலுந் துயிலைப் பொருந்தா; யாமத்தும் மன்ற மடலூர்தல் உள்ளுவேன் - அதனால் எல்லாரும் துயிலும் இடையாமத்தும் யான் இருந்து மடலூர்தலையே கருதாநிற்பேன். ('பேதை' என்றது பருவம் பற்றி அன்று, மடமை பற்றி. 'இனிக் குறை முடிப்பது நாளை என வேண்டா' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.