காமத்துப்பால் · குறள் 1126 / 1330
113. காதற்சிறப்புரைத்தல்

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவராநுண்ணியர்எம் காத லவர்.

My lover will never vanish from my eyes; nor will he be disturbed if I close them. He is so ethereal as to be invisible.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

காதலர், கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

(ஒருவழித்தணப்பின்கண் தலைமகனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சி அவள் கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.) (தாம் காணாமை பற்றிச் சேய்மைக்கண் போயினார் என்று கருதுவார் கருதுக,) எம் காதலர் கண்ணுள்ளின் போகார் - எம்முடைய காதலர் எம் கண்ணகத்து நின்றும் போகார்; இமைப்பின் பருவரார் - யாம் அறியாது இமைத்தேமாயின் அதனால் வருந்துவதும் செய்யார்; நுண்ணியர் - ஆகலான் காணப்படா நுண்ணியர். (இடைவிடாத நினைவின் முதிர்ச்சியான் எப்பொழுதும் முன்னே தோன்றலின் 'கண்ணுள்ளின் போகார்' என்றும், இமைத்துழியும் அது நிற்றலான் 'இமைப்பின் பருவரார்' என்றும் கூறினாள்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

என் அன்பர் என் கண்ணை விட்டுப் போகமாட்டிடார்; ஒருவேளை நான் அறியாமல் இமைத்தால் வருந்தவும் மாட்டார். பிறர் அறிய முடியாத நுட்பத் தன்மையர் அவர்.

— சாலமன் பாப்பையா