மு.வரதராசன் விளக்கம்
ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும்,அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்.
பரிமேலழகர் விளக்கம்
(பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது.) ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள் - தெரிந்த இழையினையுடையாள் எனக்குப் புணருமிடத்து உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும், நீங்குமிடத்து அதற்குச் சாதல் அன்னள் - பிரியுமிடத்து, அதற்கு அதனின் நீங்கிப் போதல் போலும்; ('எனக்கு' என்பதும், 'புணருமிடத்து' என்பதும் அவாய் நிலையான் வந்தன. வாழும் காலத்து வேற்றுமையின்றி வழி நிற்றலானும், சாகும் காலத்து வருத்தம் செய்தலானும் அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என் மனைவி, நான் அவளுடன் கூடும்போது உயிருக்கு உடம்பு போன்றிருக்கிறாள். அவளைப் பிரியும்போது உயிர் உடம்பை விட்டுப் பிரிவது போன்றிருக்கிறாள்.