மு.வரதராசன் விளக்கம்
அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை.
பரிமேலழகர் விளக்கம்
(உடன் போக்கு உரைத்த தோழிக்கு அதனது அருமை கூறி மறுத்தது.) அனிச்சமும் அன்னத்தின் தூவியும் - உலகத்தாரான் மென்மைக்கு எடுக்கப்பட்ட அனிச்சப்பூவும் அன்னப்புள்ளின் சிறகும் ஆகிய இரண்டும்; மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தஞ் செய்யும்.(முன் வலிதாதலுடைமையின் பழம் என்றான். இத்தன்மைத்தாய அடி 'பாத்திஅன்ன குடுமிக் கூர்ங்கற்'களையுடைய (அகநா.களிற்.5)வெஞ்சுரத்தை யாங்ஙனம் கடக்கும்'? என்பது குறிப்பாற் பெறப்பட்டது. செம்பொருளேயன்றிக் குறிப்புப் பொருளும் அடிநலனழியாமையாகலின், இதுவும் இவ்வதிகாரத்ததாயிற்று.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும்.