குறள் 1114:

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

The lotus, seeing her, with head demiss, the ground would eye, And say, 'With eyes of her, rich gems who wears, we cannot vie.'
அதிகாரம் - 112 - நலம்புனைந்துரைத்தல்
மு.வரதராசன் விளக்கம்
குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், "இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே!" எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்.
பரிமேலழகர் விளக்கம்
(பாங்கற்கூட்டத்துச் சென்று சார்தலுறுவான் சொல்லியது.) குவளை - குவளைப் பூக்கள் தாமும்; காணின் - காண்டல் தொழிலையுடையவாயின்; மாண் இழை கண் ஒவ்வேம் என்று கவிழ்ந்து நிலன் நோக்கும் - மாண்ட இழையினை உடையாள் கண்களை யாம் ஒவ்வேம் என்று கருதி அந்நாணினால் இறைஞ்சி நிலத்தினை நோக்கும்.(பண்பானேயன்றித் தொழிலானும் ஒவ்வாது என்பான், 'காணின்'என்றும், கண்டால் அவ்வொவ்வாமையால் நாணுடைத்தாம் என்பது தோன்றக் 'கவிழ்ந்து' என்றும் கூறினான். காட்சியும் நாணும் இன்மையின் செம்மாந்து வானை நோக்கின என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
குவளைப் பூக்களால் காண முடியுமானால், சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் என் மனைவியின் கண்ணைப் போல தாம் இருக்கமாட்டோம் என்று எண்ணி நாணத்தால் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்கும்.