குறள் 1108:

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

Sweet is the strict embrace of those whom fond affection binds, Where no dissevering breath of discord entrance finds
அதிகாரம் - 111 - புணர்ச்சிமகிழ்தல்
மு.வரதராசன் விளக்கம்
காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
(ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே இனியது என வரைவுகடாய தோழிக்குச் சொல்லியது.) (நீ சொல்லுகின்ற தொக்கும்) வளி இடை போழப்படா முயக்கு - ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம்; வீழும் இருவர்க்கு இனிதே - ஒருவரையொருவர் விழைவார் இருவர்க்கும் இனிதே. (முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. 'ஈண்டு இருவர் இல்லை இன்மையான், இஃது ஒவ்வாது' என்பது கருத்து. களவிற்புணர்ச்சியை மகிழ்ந்து வரைவு உடன்படான் கூறியவாறு.)
சாலமன் பாப்பையா விளக்கம்
இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.