மு.வரதராசன் விளக்கம்
கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது) கண்ணொடு கண்இணை நோக்கு ஒக்கின் - காமத்திற்கு உரிய இருவருள் ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் நோக்கால் ஒக்குமாயின்; வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல - அவர் வாய்மை தோன்றச் சொல்லுகின்ற வாய்ச்சொற்கள் ஒரு பயனும் உடைய அல்ல. (நோக்கால் ஒத்தல்: காதல் நோக்கினவாதல். வாய்ச் சொற்கள்: மனத்தின்கண் இன்றி வாயளவில் தோன்றுகின்ற சொற்கள். இருவர் சொல்லும் கேட்டு உலகியல்மேல் வைத்துக் கூறியவாறு. இருவர் சொல்லுமாவன: அவள் புனங்காவல் மேலும், அவன் வேட்டத்தின் மேலும் சொல்லுவன. பயனில் சொற்களாகலின்,இவை கொள்ளப்படா என்பதாம். இவை புணர்தல் நிமித்தம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.