குறள் 1096:
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.
Though with their lips affection they disown, Yet, when they hate us not, 'tis quickly known
அதிகாரம் - 110 - குறிப்பறிதல்
மு.வரதராசன் விளக்கம்
புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்.
பரிமேலழகர் விளக்கம்
(தோழி சேண்படுத்தவழி அவள் குறிப்பு அறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.) உறாஅதவர்போல் சொலினும் - புறத்து நொதுமலர் போலக் கடுஞ்சொல் சொன்னாராயினும்; செறாஅர் சொல் ஒல்லை உணரப்படும் - அகத்துச் செறுதலிலாதார் சொல் பிற்பயத்தல் குறையுற்றாரால் கடிதின் அறியப்படும். (கடுஞ்சொல் என்பது, 'இவ்விடம் காவல் மிகுதி உடைத்து, வரற்பாலிர் அல்லீர்' என்றல் முதலாயின. 'செறார்' எனவே, அருள் உடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக் கருதியே சேண்படுக்கின்றமை குறிப்பான் அறிந்து, உலகியல் மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கும் ஒக்கும்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
(பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.