காமத்துப்பால் · குறள் 1089 / 1330
109. தகையணங்குறுத்தல்

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்குஅணியெவனோ ஏதில தந்து.

What need of ornament has this lady of modesty, adorned with the glances of an antelope?

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும்,நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

(அணிகலத்தானாய வருத்தம் கூறியது.) பிணை ஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு - புறத்து மான் பிணை ஒத்த மடநோக்கினையும் அகத்து நாணினையும் உடையாளாய இவட்கு; ஏதில தந்து அணி எவன்? - ஒற்றுமை உடைய இவ்வணிகளே அமைந்திருக்க வேற்றுமையுடைய அணிகளைப் படைத்து அணிதல் என்ன பயனுடைத்து? (மடநோக்கு - வெருவுதல்உடைய நோக்கு. 'இவட்குப் பாரமாதலும் எனக்கு அணங்காதலும் கருதாமையின், அணிந்தார் அறிவிலர்' என்பதாம்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?

— சாலமன் பாப்பையா