மு.வரதராசன் விளக்கம்
மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
குணத்தில் ஒருவர் கயவராக இருப்பார். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.
பரிமேலழகர் விளக்கம்
மக்களே போல்வர் கயவர் - வடிவான் முழுதும் மக்களை ஒப்பர் கயவர்; அவர் அன்ன ஒப்பாரி யாம் கண்டது இல் - அவர் மக்களை யொத்தாற்போன்ற ஒப்பு வேறு இரண்டு சாதிக்கண் யாம் கண்டதில்லை. (முழுதும் ஒத்தல் தேற்றேகாரத்தால் பெற்றாம். 'அவர்' என்றது அவர் மாட்டுளதாய ஒப்புமையை. மக்கட் சாதிக்கும் கயச்சாதிக்கும் வடிவு ஒத்தலின், குணங்களது உண்மை இன்மைகளானல்லது வேற்றுமை அறியப்படாது என்பதாம். இதனான் கயவரது குற்றமிகுதி கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
கயவர் வெளித்தோற்றத்தில் மனிதரைப் போலவே இருப்பர்; விலங்கு பறவை போன்ற பிற இனங்களில் அவருக்கு ஒப்பானவரை நான் கண்டது இல்லை.