மு.வரதராசன் விளக்கம்
இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல.
பரிமேலழகர் விளக்கம்
இரத்தக்கார்க் காணின் இரக்க - நல்கூர்ந்தார் இரத்தற்கு ஏற்புடையாரைக் காணின், அவர்மாட்டு இரக்க; கரப்பின் அவர் பழி தம் பழி அன்று - இரந்தால் அவர் கரந்தாராயின் அவர்க்குப் பழியாவதல்லது தமக்குப் பழியாகாமையான். ('இரவு' என்னும் முதனிலைத் தொழிற்பெயரது இறுதிக்கண் நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இரத்தற்கு ஏற்புடையராவார் உரையாமை முன் உணரும் ஒண்மையுடையராய் மாற்றாது ஈவார். அவர் உலகத்து அரியராகலின், 'காணின்' என்றும், அவர் மாட்டு இரந்தார்க்கு இரவான் வரும் இழிபு இன்மையின், 'இரக்க' என்றும், அவர் ஈதலின் குறை காட்டாமையின் 'கரப்பின்' என்றும், காட்டுவராயின் அப்பழி தூவெள்ளறுவைக்கண் மாசுபோல, அவர்கண் கடிது சேறலின் 'அவர்பழி' என்றும்,ஏற்பிலார் மாட்டு இரவன்மையின் 'தம் பழியன்று' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஏதும் இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிழதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால் பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.