மு.வரதராசன் விளக்கம்
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொறுத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொறுத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.
பரிமேலழகர் விளக்கம்
உதவி உதவி வரைத்து அன்று - கைம்மாறான உதவி, காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து - அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று. '(சால்பு எவ்வளவு பெரிதாயிற்று, உதவியும் அவ்வளவு பெரிதாம்' என்பார், "சால்பின்" வரைத்து என்றார். இவை இரண்டு பாட்டானும் மூன்றும் அல்லாத உதவி மாத்திரமும் அறிவார்க்குச் செய்த வழிப் பெரிதாம் என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.