பொருட்பால் · குறள் 1041 / 1330
105. நல்குரவு

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்இன்மையே இன்னா தது.

There is no greater evil than poverty!

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

இன்மையின் இன்னாதது யாது எனின் - ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே - வறுமை போல இன்னாதது வறுமையே, பிறிதில்லை. (இன்னாதது - துன்பஞ்செய்வது. ஒப்பது இல்லை எனவே, மிக்கது இன்மை சொல்ல வேண்டாவாயிற்று)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.

— சாலமன் பாப்பையா