மு.வரதராசன் விளக்கம்
உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
உழவினார் கை மடங்கின் - உழுதலையுடையார் கை அதனைச் செய்யாது மடங்குமாயின்; விழைவதூஉம் விட்டேம் என்பார்க்கு நிலை இல்லை - யாவரும் விழையும் உணவும் யாம் துறந்தேம் என்பார்க்கு அவ்வறத்தின்கண் நிற்றலும் உளவாகா. (உம்மை, இறுதிக்கண்ணும் வந்து இயைந்தது. உணவின்மையான் தாம் உண்டலும் இல்லறஞ்செய்தலும் யாவர்க்கும் இல்லையாயின. அவர் உறுப்புமாத்திரமாய கை வாளாவிருப்பின், உலகத்து இம்மை மறுமை வீடு என்னும் பயன்கள் நிகழா என்பதாம். 'ஒன்றனை மனத்தால் விழைதலும் ஒழிந்தேம் என்பார்க்கு' என உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அதைச் செய்வாரது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.