மு.வரதராசன் விளக்கம்
புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
சீர் உடைச் செல்வர் சிறுதுனி - புகழுடைத்தாய செல்வத்தினையுடையவரது நிற்கும் காலம் சிறிதாய வறுமை; மாரி வறங்கூர்ந்தனையது உடைத்து - உலகத்தையெல்லாம் நிலை நிறுத்தும் மேகம் வறுமை மிக்காற் போல்வதோர் இயல்பினையுடைத்து.(துனி - வெறுப்பு, அதனைச் செய்தலால், துனி எனப்பட்டது. யாவர்க்கும் பயன்பட்டார் அதனான் வறியராய வழியும், அவ்வறுமை கடிதின் நீங்குதலின், பின்பும் செல்வராய்ப் பயன்படுவர் என்பது உவமையால் பெறப்பட்டது. படவே, நன்றியில்லாத செல்வம் எஞ்ஞான்றும் பயன்படாது என்பதாயிற்று. இதற்கு, சீர் உடைச் செல்வர் இரவலரோடு வெறுக்கும் நிலையில் வெறுப்பு 'மாரி வறங்கூர்ந்தனைய தன்மையை உடைத்து' என அதிகாரத்தோடு பொருந்தாமை மேலும், ஓர் பொருள் தொடர்புபடாமல் உரைப்பாரும் உளர். இவை நான்கு பாட்டானும் அச்செல்வத்தது குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரம் மேகமே வறுமைப்பட்டது போலாம்.